Monday, July 12, 2010

யாருக்கு வேணும் இவ்வாழ்கை!

யாருக்கு வேணும் இவ்வாழ்கை!
Tuesday, July 6, 2010 at 5:29am |
என் தம்பி பாலாவிண் சோக காதல் கவிதையை படித்து என் முகத்தில் இரண்டு குளங்கள்.
சும்மா ஜாலியா 'டேக் இட் ஈசி' குப்பை காவியம் ஒன்றை எழுத தீர்மானித்தேன்... அதுதான் இது!
என் தங்கைகள் என்னை 'கொன்னு.. கொன்னு ...' செய்தாலும் கிராக்கு அண்ணா என்று மன்னிப்பார்கள் என்ற தைரியம்தான்.
படிங்க! மறங்க! தமிழ் மாநாடு ஆய்வுக்கெல்லாம் எடுத்துக்காதீங்க!!.


காதலே! நீதான் வள்ளலா?
ஒற்றை ரோஜாவும் கத்தை பூங்கொத்தும்
என் வீட்டை நித்தம் அலங்கரிக்குதே!
வெத்துப்பயல்களை நிறைய சொத்துடன் அலையவிட்டாயே?
உனக்குத்தான் என்ன ஒரு கருணை?
பையப்பறந்து செல்ல பைக்குடன் ஒரு பையன்
என் தொப்பை நிறைய கடன் அட்டையுடன் ஒரு ஜொள்ளன்
மழை பெய்தால் காருடன் கண்ணியமாய்
காத்திருக்கும் ஒரு பாரதிக்கண்ணன்

காதலே உன் கரும்பு வில்லுக்கு வயதும் பொருட்டில்லையே?
வேலைக்கு போனால் வழிந்தே
நாளை கழிக்கும் சொட்டை மேலாளர்
என் சிரிப்புக்கு அறுவை ஜோக் சொல்லும்
நரைத்த கணக்காளர்
எனக்கு கதவு திறந்து தேங்க்ஸ்க்கு ஏங்கும்
கொட்டை போட்ட குமாஸ்தா!

அப்பா சொன்னார் கண்டவனும் கூப்பிடுகிறான்
சீக்கிரம் கல்யாணம் செய்துக்கொள் ...
வேண்டாம் என்றேன், இந்த
சுகங்கள் போய் சந்தேக கணவனும்
சமைத்துப்போட சொல்லும் மாமியாளும்,
நொடிக்கு ஒரு காபி கேட்கும் ரிடையர்டு மாமனாரும்
என் புடவைமேல் கண் வைக்கும்
பொறாமை நாத்தனாரும்
யாருக்கு வேணும் இவ்வாழ்வு?

இவர்களிடம் தப்பி வீட்டுக்கு வந்தால்
புழு பூச்சி கேட்கும் தாய் தந்தை!
மாப்பிளைக்கு அதை செய் இதை செய் என்று
மாமியாராகிபோன அம்மா
யாருக்கு வேணும் இவ்வாழ்கை!

டிஸ்கோ கிளப்புக்கு போய் விடுவேன்!
லேசாய் ரெண்டு ரவுண்டும் அடித்திடுவேன்
'மச்சி குடு' என்று ஒரு ஓசி தம்மும் இழுத்திடுவேன்!
இருபத்தியோரு நாட்கள் ஈஸ்டர்ஜெனும் ப்ரோகச்டிரோனும் விழுங்கிடுவேன்!

நான் ஒரு பதுமைப்பெண், பாரதி
காணத்தவறிய புதுமைபெண்
விடலை பயல்களின் கனவுப்பெண்!
காதலே நீ வாழ்க! வையகத்தில் புகழ் பெறுக!
சாதலை அவர்கள் வைத்துக்கொள்ளட்டும்!
யாருக்கு வேணும் இவ்வாழ்கை!
லேசாய் ரெண்டு ரவுண்டும்...

திராமாயணம்

திராமாயணம்
Tuesday, June 29, 2010 at 6:40pm
ராவணனுக்கு சாரு நிவேதிதாவிலிருந்து அமிதா பச்சன் வரை விமரிசனம் எழுதியாகிவிட்டது. அனைவருக்கும் கொஞ்சத்திலிருந்து மிகுதியாக ஏதோ ஒரு வகை ஏமாற்றமே. எதிலும் குறை கூறாத பண்புள்ள அருமை நண்பர் மணிவண்ணன் இந்த படைப்பை ஒரு திராவிட - மேல்குடி போராட்டமாக ஒரு கருத்து படைத்தார்.

இதிலே ஒரே குழப்பம்.

இந்தியாவில் தாழ்த்தபட்டவர் அனைவரும் திராவிடர்களா?

அல்லது ஆந்திரா கர்நாடகம் கேரளம் மட்டும்தானா? இல்லை தமிழ்நாடு மட்டும்தானா?

ஒரு நேரடி கேள்வி: பிராமணன் மட்டும்தான் மேல்குடியா? க்ஷத்ரியர்கள், வைசியர்கள் அதில் உண்டா?

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் கர்நாடகத்து மண்டயம் ஐயங்கார் (ராமானுஜரால் தாழ்த்தப்பட்ட ஜாதியில் இருந்து பூணுல் இடப்பட்டு பிரம்மோபதேசம் பெற்றவர்களும் இதில் அடங்கும்) ஜெயலலிதா நீங்கலாக முதலமைச்சர்களாய் இருந்த அனைவரும் பிராமணர் இல்லாதவரே. அதற்க்கு முன்னும் ஜஸ்டிஸ் கட்சிதான் மதராஸ் மாகாணம் நிர்வாகம் செய்தது. இதில் எம் ஜி ஆரை எதில் சேர்ப்பது?

எந்த நிலையில் அவர்கள் திராவிடர் என்ற நிலை போய் மேல்குடி ஆகிறார்கள்?
இன்றைய ஆட்சியாளர்கள் மேல்குடியா இன்னும் தாழ்த்தப்பட்ட ஆதிவாசிகளா?

சரி அடுத்தப்ப்ரச்சினை.
தமிழனுக்கு மட்டும் வருவோம்.
தமிழன் வடக்கில் (சரஸ்வத் நதி இந்து சம வெளி நாகரீகம்) இருந்து ஆரியர்களால் ஒடுக்கப்பட்டு தெற்கில் குடி ஏறியவனா?
இல்லை இன்றைய தென் நாடு, இலங்கை கடல் கொண்டு போன குமரிக்கண்டம் போன்ற பரப்பின் ஆதி குடி மகனா?

சுருக்கமாக சொல்லப்போனால் மேல்குடி யார்? இன்றைய அரசு மத்தியில் ஆகட்டும், தமிழ் நாட்டில் ஆகட்டும், எந்த குடி ஆள்கின்றார்கள்?

'பபே' என்று சொல்லப்படும் உணவு முறை போல அவரவரும் தனக்கு வேண்டியதை திரிக்கும் அளவு திரித்து பேசி, பேச்சு மாயையில் குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த கேவலத்தின் நடுவில் ராவணன்.
வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள், பல மொழிப்புலமை, வைணீகன், இசை அறிஞன் இலங்கேஸ்வரன் என்ற நிலை போய் ஒரு காட்டுவாசியாய் ஒரு திரிப்பு.
விபீஷணன் ராமனால் கொல்லப்பட்டதை திராவிட பெருமையாய் நினைக்கும் ஒரு திரிப்பு,
சூர்ப்பனகை ராமனின் ஆட்களால் கற்பழிக்கப்படும் திரிப்பில் ஒரு ஆனந்தம்,
இப்படியாக திராவிடம் மூளை சலவை செய்து போதைப்பொருளாய் மாறிவிட்டது. ஒவ்வொருவனும் அவனுடைய வாழ்க்கையின் தோல்விக்கு, உழைப்பின்மைய்க்கு இந்த போதை மருந்து ஊட்டப்படுகின்றது. இந்த போதை இறங்கும் நேரத்தில் ராவணன் போன்ற படைப்புக்கள் மீண்டும் அந்த போதையை ஏற்றுகின்றன.


அவர்களுக்காக இதோ ஒரு அராமாயண போதை.


பால காண்டம்: ராமனின் தந்தை ஒரு உல்லாச பேர்வழி. பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பவர். அவருக்கு தெரியாமலேயே பிறந்த மகன்தான் ராமன். ராமன் சிறு குழந்தையாக இருந்தா போதே மக்களை துன்புற செய்யும் குணம் படைத்தவன். வயதான கிழவிகளை கூட விட்டு வைப்பதில்லை. அவர்கள் வீட்டில் அடிமையாய் இருக்கும் ஒரு திராவிட கிழவியை (கூனி) துன்புறுத்த அவள் நொந்து போய் கண்ணீர் விடுகிறாள். (ஒரு கிராமத்து பாடல், அந்த பாடல் பின்னணியில் டைட்டில்). இசை ப்ரோ லாஜிக் மென்பொருள் மூலம் அமைக்கப்படும்.....சக்கரம் சுத்தி ராமன் இப்போது இளைஞன்.

அயோத்தி காண்டம்: தன்னுடைய தந்தையை சிறை வைத்து தாயையும் தந்தை உறவு வைத்திருந்த பெண்களையும் கொன்று புதைக்கின்றான். பின் தந்தையை அந்த பெண்களை புதைத்த இடத்தை காணுமாறு சிறையில் அடைக்கின்றான். (அதாவது ஷாஜகான், அவுரங்கசீப் கதை...) இங்கே அரண்மனையில் ஒரு பாடல் காட்சி....(யாரடி நீ மோகினி பாணியில் ஒரு குத்து பாட்டு)...

ஆரண்ய காண்டம்: இப்போது கதாநாயகன் அறிமுகம்.... ராமனின் கையாட்கள் பெண்களை துன்புறுத்துகிறார்கள். அதை கண்ட ராவணன் விரைந்துவந்து அவர்களை அடித்து நொறுக்குகிறான். (கொஞ்சம் ஸ்டைல் கலந்து பஞ்ச் டயலாக் சொல்லி....சந்திரமுகி பாணி).... பின் அவன் வீட்டுக்கு போகிறான், அது ஒரு காடு, அருவி, மழை எல்லாம் உண்டு. அவன் ஒரு குடிசைக்குள் நுழைகிறான். உள்ளே அனைத்து சௌகரியங்களும் (தமிழ் படம் மாதிரி)... அடி பட்ட ஆட்கள் ராமனிடம் போய் சொல்கிறார்கள். ராமன் உடனே பழி வாங்க புறப்படுகிறான். அவனுடன் சில அடிமை பெண்களும். அந்த பெண்களில் ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு காதல். ஆனால் அந்த பெண்ணோ ராவணனை கண்டு மயங்கி அவனுடன் வந்து விடுகிறாள்.

கிஷ்கிந்தா காண்டம்: சமாதான படை என்று ஒன்றை அனுப்பி ராவணன் ஆட்கள் நம்பி அவர்களை உள்ளே விட்டவுடன் அவர்கள் பல மக்களை கொல்கின்றார்கள். அதற்குள் ராமன் கடத்தப்பட பெண்ணின் உடலில் இருந்த துணியை வைத்து மோப்ப நாய்களை ஏவி விடுகிறான் ராமன்.

சுந்தர காண்டம் : இங்கே ஒரு காட்டு நடனம், மழையில்....அப்போதுதான் அந்த நாய்கள் நுழைகின்றன. அந்த பெண்ணை கண்டவுடன் அந்த நாய் பெட்டிப்பாம்பாய் அடங்கி அவளை நக்குகிறது. அவைகளை ராவணன் ரொட்டி துண்டு கொடுத்து கொஞ்சுகிறான், அவற்றுடன் அதனுடைய மொழியில் பேசுகிறான். ஒரே ஒரு நாயை மட்டும் திரும்ப அனுப்புகிறான். ராமனுடன் வந்த எண்ணற்ற தம்பிகளில் ராமன் மேல் பொறாமை கொண்ட ஒருவன் (பரதன்) நாய் வாலில் பட்டாசு வைத்து கொளுத்தி ராமனிடம் அனுப்புகிறான்.

யுத்த காண்டம்: பரதன் ராவணனிடம் மனிப்பு கேட்டு வந்து சேருகின்றான். சண்டை காட்சிகள். ராமன் ஒரு மரத்தின் பின் ஒளிந்திருந்து ராவணனை ஈட்டியால் குத்துகிறான். (பல நாட்கள் ஆகி விட்டது, நாலு பக்கத்துக்கு இங்கே கலைஞர் வசனம்----) முடிவில் அந்த ஈட்டியை பிடுங்கி ராமனை குத்துகிறான் பரதன்.

உத்தர காண்டம்: அப்போது ஒரு வயதான பெண்மணி பரதனை கட்டி அணைத்து நீதான் என் மகன்....நான் அடிமையாக இருந்த போது உன்னை பெற்றேன்...யாருக்கும் தெரியாமல் உன்னை வளர்த்தேன் என்ற வசனம்.... பரதன் தானும் திராவிடன் என்று தெரிந்து அந்த பெண்ணை மணந்து மக்களுக்கு நன்மை செய்கிறான்.

இந்த அராமாயணத்தை பாராயணம் செய்பவர்கள் வாழ்க்கையில் நல்ல புரட்சி போதையும் தூபம் போடும் தன்மையும் அடைவார்கள்.
வாழ்க ராவணன் வளர்க அவன்தன் புரட்சி.
NORTH
SOUTH
PAST

தமிழை காக்கலாம், தமிழை கற்கலாம், தமிழை விற்கலாமா?

தமிழை காக்கலாம், தமிழை கற்கலாம், தமிழை விற்கலாமா?
தமிழ் மொழிக்கு மூன்று பிள்ளைகள். முதலாமவன் தீவிரவாதி, உலகில் உள்ள மற்ற மொழிகளை எல்லாம் அழித்துவிடு. உலகே தமிழனுக்குதான் சொந்தம். தமிழனிடமிருந்து திருடித்தான் மற்ற மொழியினர் வாழ்கிறார்கள் என்று கொள்கையுடையவன்.
இரண்டாமவன் மிதவாதி, தமிழை மற்ற மொழி கலப்பிலிருந்து காப்பாற்று. மற்ற மொழி சொல் போல் இருந்தால் அச்சொல் தமிழிலிருந்து தான் வேறு மொழிக்கு போயிருக்க வேண்டும் என்று கொள்கையுடையவன்.
மூன்றாமவன் நாம் எப்படி இருந்தால் என்ன, இத்தனை வருடம் வாழ்ந்த தமிழ் அழிந்தா போகப்போகிறது என்னும் தாராளவாதி.
இதற்கிடையில் இவற்றையெல்லாம் ஓட்டாக தமிழை விற்று வாங்கும் அரசியல் கண்மணிகள்.
இந்த கண்மணிகள் இரட்டை குழல் துப்பாக்கியாய் தமிழை தமிழால் சுட்டு கொண்டிருப்பதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழ் கல்வி:
என்னுடைய இந்த படிவத்தின் காரணமே நேற்றைய பள்ளி தேர்வு முடிவுதான்.
எனக்குள் ஒரு கேள்வி, ஏன் மாநகரத்து மாணவர்கள் யாரும் அதிக மதிப்பெண் பெறவில்லை, எல்லா மாணவர்களும் சிற்றூர்களில் கற்றவர்களே. அதை பற்றி நான் கருத்து தினமலர் செய்தியுடன் பதிவு செய்திருந்தேன்.
அதற்க்கு பின்னூட்டம் அளித்த நண்பர் ராம், பல மாணவர்கள் தமிழில் அதிக மதிப்பெண் வாங்க முடியாததால் மற்ற மொழிகளை இரண்டாம் மொழியாக பயில்கின்றனர் என்று கருத்து தெரிவித்தார். தமிழக அரசு சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுக்கும் போது தமிழை இரண்டாம் மொழியாக கொண்டவர்களையே கணக்கில் எடுத்து கொள்கின்றது என்ற பின்னூட்டத்தையும் அளித்தார். இந்த நிலை நான் படித்த காலத்திலேயே உண்டு. பிரெஞ்சு மொழிக்கென்று ஒரு பிரிவே இருந்தது. அதில் சேர போட்டியும் உண்டு. ஒரே காரணம் பிரெஞ்சு மொழியில் நூறு சதம் மதிப்பெண் வாங்க முடியும் என்ற உண்மையே.

தமிழ் ஆசிரியர்கள் ஏன் தமிழ் கேள்வித்தாள்களை நூறு மதிப்பெண் பெறுமாறு அமைக்க கூடாது? எப்படி படித்தால் நூறு சதம் தமிழில் வாங்கமுடியும்? ஒரு கட்டுரை எழுத சொல்லி அதற்க்கு இருபது மதிப்பெண் என்றால் ஆசிரியர்கள் பதினைந்து மதிப்பெண் மேல் தருவதில்லை, இந்த நிலை ஏன்? தமிழில் நூறு சதம் வாங்க முடியும் என்ற நிலை இருந்தால் எத்தனையோ மாணவர்கள் தமிழ் மொழியை படிப்பார்களே? இந்த நிலை ஏன் மாறக்கூடாது? தமிழ் கல்வி, நான் எல்லா பாடங்களையும் தமிழ் ஆக்கம் செய்கிறேன் என்றெல்லாம் கூவி, தமிழனை காப்பது போல் பாசாங்கு செய்து ஓட்டு வாங்கும் அரசாங்கம் இந்த சிறிய பணியை செய்யலாமே?


தமிழ் பக்தி:
இதுவும் தமிழ் அரசாங்க துப்பாக்கிக்கு பலியான ஒரு தமிழ் வளர்ச்சி. கம்பன் ஓரம் கட்டப்பட்டு, நால்வர் கரைக்கப்பட்டு, ஆழ்வார்கள் குழித்தோண்டி புதைக்கப்பட்டார்கள். என்னுடைய தமிழ் ஆர்வம் வளர்ந்ததே சிறு வயதில் நான் கற்ற தேவாரமும், திருப்பள்ளிஎழுச்சியும் தான். என்னுடைய தாயார் திருப்புகலூர் என்ற ஊரில் பிறந்தவர். அது அப்பர் ஐக்கியம் ஆன தலம். அவர்கள் பள்ளிக்கு சென்ற நாட்களில் கோவில் ஓதுவாரிடம் பயின்ற தேவாரத்தை எங்களுக்கு சொல்லி நாங்கள் தினமும் ஒரு தேவாரம் சொல்லுவோம். மார்கழியில் திருப்பாவை, திருவம்பாவை சொன்னவுடன்தான் காலை உணவு. இப்பொழுது இதையெல்லாம் அரசியலாக்கி தமிழில் அர்ச்சனை என்று ஒரு புறமும், பகுத்தறிவு என்று மறு புறமும் நாடகமாடி மக்களும் அந்த முரண்பாட்டை காணமல் மிரண்டு கிடக்கிறார்கள்.


உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் தமிழை ஊட்ட வேண்டும், மற்ற மொழிகளை நிந்திப்பதாலோ, சரித்திரத்தை திரிப்பதாலோ, உண்மைகளை மறைத்து மறந்து கற்பனையில் வாழ்வதாலோ தமிழ் வளரப்போவதில்லை. தமிழ் ஆசிரியர்களே! தமிழ் எழுதும் மாணவனுக்கு மதிப்பெண் தாராளமாய் வழங்குங்கள். வாங்குவதற்கு உபாயம் சொல்லித்தாருங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் எந்த சமயமோ அந்த பாடல்களை ஊட்டுங்கள். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் திருக்குறளோ, ஆத்திச்சூடியோ சொல்லித்தாருங்கள். தானாக நாம் வளர்வோம். தமிழ் தாய். அவள் வளர்ந்தவள். அவளை நாம் வளர்க்கவேண்டாம், மறக்காமல் இருந்தால் சரி.